Friday, 18 November 2011









இவை அத்தனையும்...
 நான் வரைந்த ஓவியக் குழந்தைகள்...!
பிரசவ வலியின்றி ...
நாம் பெற்றெடுத்த முத்துக்கள்!

காலப் பெருவெளி

காலப் பெருவெளி 
உலகம் ஊமையாகிப் போனது. 
காற்றும் உறைந்தது.
மரங்கள் ஜடமாயின  
ஆதவனும் நடுவானில் அசையாமல் நின்றுவிட்டான்.
கடிகார முள் கூட நிலையாக அசையாமல் ,
காலம் கூடக் கட்டுண்டுபோனது.
அய்யோ...!
இது என்ன? பூமியும் சுற்ற வில்லை...
புவி ஈர்ப்பு விசையுமில்லை...
விசிறிஎறியப்பட்ட உயிர்கள் அத்தனையும் 
ஆகாயப் பெருவெளியில் ...
அலறல்கள் வான்முட்டிக் 
கரைகின்றன மெது மெதுவாய் ...
அதிசயமாய் இருவர்மட்டும் 
பூமியிலே தனியாக ....
அடடா...!
அது யார் ? 
நாமா?
போதும் என் கண்ணே! 
என் விழியும் உன் விழியும் 
முதன் முதலாய் சந்தித்த நொடிப் பொழுதில் 
இப்படித்தான் உணர்ந்தேன் நான்!
அன்பே....!
நம் இரு விழிகள் கலந்ததற்கே இப்படியா?
ஒருவேளை நம் ஈருடலும் ஓருயிராய் கலந்துவிட்டால்....?
இந்தப் பெரு அண்டம் முற்றிலுமே 
வெடித்தல்லவா சிதறிவிடும்..!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ...!
நாம்...
நம் காதல்...
நம் உறவு ...
நம் உணர்வு ...
இவையனைத்தும் 
காலப்பெருவெளிகள் தாண்டியும் 
விரிந்து சென்று கொண்டே...









சுவாசிகா -சமூக நல அறிவியல் முன்னேற்ற மாணவ இளைஞர் இயக்கம் ,1996 ஆம் வருடம் மே மாதம் முதல் நாள் -உழைப்பாளர் தினம் அன்று துவங்கப்பட்ட இவ்வியக்கம்,திரு  முத்துக் குமரன் அவர்களின் வழி காட்டுதலோடு, மாணவர்களுக்காக, மாணவர்களால் நடத்தப்படும் மாணவர்களின் இயக்கம் .பண்ணுருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ மாணவியரின் உள்ளங்களில் தலைமைப் பண்புகளை ,அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதத்திலும் இளம் வயதிலேயே சேவை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவித்து அவர்களுக்கு சமூக சேவைகளை செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து ,தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. 

Tuesday, 15 November 2011

விரக்தி

வான்வழங்கும் அமுதம்எல்லாம் தரைநெடுகத் தானோடி 
நான்பார்க்கக் கடலினிலே கலந்திடுதே -வீண்தானோ 
நானுனக்கு நடத்துகின்ற பாடமெல்லாம் அதுவானால் 
ஏனுனக்கு நடத்தவேண்டும் நான்?

Monday, 14 November 2011









இவை அனைத்தும் என் தூரிகை ஈன்றெடுத்த மழலைகள்..
உங்கள் கண்கள் என்னும் மடியினிலே தவழ்ந்தாட 
தவமிருக்கும் என் செல்லப்பிள்ளைகள்
உங்கள் ரசனை என்னும் பாச மழைக்காய் ஏங்கி நிற்கும் பசும் குருத்துக்கள்
பாருங்கள்...
இருகண்களால் வருடுங்கள் ... 

விருப்பம்

 விருப்பம் 
அன்பே ....
நினைவிருக்கிறதா..?
முதன்முதலில் விளையாட்டாய்
உன் விருப்பம் நீ எழுத 
என் விருப்பம் நான் எழுத
பரஸ்பரம் கேட்டோமே.....!
எழுதியபின்
 தாள் மாற்றி படித்தபோதோ
உன் தாளில் என் விருப்பம்...
என் தாளில் உன் விருப்பம் ...!
அன்றே உணர்ந்தேன் நான்.
.உன் உடலில் என் மனமும் 
 என் உடலில் உன் மனமும் !

Sunday, 13 November 2011

ஏன்....?

                ஏன்....?  
 மனம் வெறுமை ஆகிறதே
        மழை விட்ட மேகம்போல் 
தினம் காணும் கனவெல்லாம் 
       விடியலிலே மறைவது போல் 
வனம்தனிலே பாதைதனை 
        தொலைத்துவிட்ட மனிதன் போல் 
தனம் முழுதும் பறிகொடுத்த 
         செல்வந்தன் மனமதுபோல் ...!
ஏன்....?

Sunday, 6 November 2011

படி

ஆங்கிலம் கணிதம் அறிவியல் இம்மூன்றும் 
தங்குதடை இல்லாமல் கற்றுவிடு -மாங்குயிலே  
அப்போது தான்கிடைக்கும் படித்திடவே இடமுனக்கு 
தப்பாது கல்லூரி யில் .

Thursday, 3 November 2011

வெண்பா

சொக்கவைத்து மதிமயக்கும் சொந்தப்பெயர் மறக்கடிக்கும் 
செக்குமாடாய்ச் சுற்றிடுமே என்மனது -சக்கரையே 
கமலமலர்க் கண்ணசைத்து கனியதரம் துடிதுடிக்க
எமதுபெயர் நீயுரைக்கும் போது. 

இது வெண்பா வகைக்  கவிதை

கவிதை!

  கவிதை!

மனமென்னும் விசைத் தறியில்

     வார்த்தை ஜாலமேன்னும்
            வண்ணமிகு நூல்கொண்டு 
                  நயமெனும் ஜரிகை சேர்த்து 
                        கவிஞன் நெய்யும் 
                              கைத்தறிச் சேலை...
                                            கவிதை!

Wednesday, 2 November 2011

தொலைகாட்சி

தேவையிலாத் திரைப்படமும் தெளிவிலா  நீள்தொடரும் 
சுவையில்லா நிகழ்ச்சிகளும் காட்டிடுமே- அவையொதுக்கு
இலையென்றால் பொன்னான நேரத்தைத் தின்றிடுமே 
தொலைகாட்சி என்கின்ற பேய்.


இது வெண்பா வகை .