Tuesday, 24 July 2012

வெறுமை

 நிலவில்லா நீள் நெடுவானம் 
           வெறிச்சோடி இருப்பதைப்  போல 
நீயில்லா நாட்களில் 
          வெறுமையாகிப் போகிறது 
                           என் வாழ்க்கை !
  
சிறு புன்னகை தவழும் 
           உன் பூமுகம் காணாப் பொழுதுகளில் 
சிறகொடிந்து போகிறது 
            என் கற்பனைப் பறவை !

உன் காந்தக் கண்களில் 
             நான் தொலைந்து போன நாள் முதலாய்
 தன் கனவுகளைத் தொலைக்கின்றன 
             என்  உறக்க  நேரங்கள் !

வருகிறேன் எனச் சொல்லி 
               வாராமல் போன காலம் ...
காத்திருத்தளிலேயே நீண்டுபோயின
        என் நெடிய பொழுதுகள் !
உன்பிரிவு  தாங்காமல் 
               புழுங்கி மனம் தவிக்கையிலே 
பனி நீரில் குளித்துவிட்ட புது  ரோஜா பூவுக்கும்  
               வியர்த்து  வடிவதாய்த்தான்      
                                    எனக்குத்  தோணுதடி !

இனி ஒருபொழுதும் 
              எனை நெருங்க மாட்டாய் நீ 
என அறிந்த நாள் முதலாய் 
             என் பட்டப் பகலனைத்தும் 
                                  நட்டநடுநிசியைப் போல் 
                                                  இருட்டாகிப் போகுதடி!