Thursday, 27 October 2011

புழுக்கம

   புழுக்கம் 


கண்ணுக்கு எட்டிய தூரம்வரையிலும் 
கார்மேகம் மட்டுமே கவி பாடுகிறது.
கவிதை வரிகளாய் மழையின் தூறல்கள்.
அடிக்கின்ற காற்றிலே 
திசை மாறிய தூறல் 
சாரலாய் வீசுகிறது
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்றில் 
சிங்காரமாய்த் தலையசைக்கின்றன 
நீரையுண்ட விருட்சங்கள்.
இலைகள் குடித்த  மிச்ச எச்சிலை
இன்பமாக சுவைக்கின்றன 
மரத்தடிப் புற்கள்.
தான் உண்ட நீர் போக 
சேர்த்துத் தேக்குகிறது பூமி
சிறு சிறு குட்டைகளாய்.
உற்சாகமாய் சிறகுகள் விரித்து 
உடலை நனைத்து ,
நீரைக் குடித்து, 
சிலிர்த்து,உதறி ,மீண்டும் குளித்து
கும்மாளமிடும் காக்கைக் கூட்டம்
குளியல் தந்த உற்சாகத்தில்
கா கா எனக் கரைந்து 
பறந்து செல்கிறது விரைந்து !
வானம் கவிழ்ந்துவிட்டதன் காரணத்தால் 
பூமியெங்கும் அரை வெளிச்சம்...
இருட்டிற்குச் சாம்பல் வண்ணமாய் ...!
உடலை வருடி 
மெல்ல வீசுகிறது ஊதற்காற்று.
பூமியெங்கும் இதமான குளிர்.
வீசும் காற்றில் குளிர்.
மண்ணில் குளிர்.
மழைச் சாரலில் குளிர்.
சாரல் பட்டுத் தெரித்ததால்
உடல் எங்கும் குளிர்.
சாரல் நிறைந்த ஈரக்காற்றை 
உள்ளுககாய் சுவாசித்து,
உள்நிரப்பியதால் நுரையீரலில் குளிர்.
ஒவ்வொரு செல்லிலும் , உயிரிலும் குளிர்.
உன்னைச் சுற்றி 
எல்லாம் குளிர்ந்தும்கூட ,
என் உள்ளமே ...
உனக்குமட்டும் 
வியர்த்து வடிகிறதே ...!
ஏன்...?


                                                       ....மாணவ நண்பன்.

No comments:

Post a Comment