மழை ரோஜா
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
கார்மேகம் மட்டுமே கவி பாடுகிறது!
வெண் மேகம் எதுவுமின்றி
வெறிச்சோடிக் கிடக்கிறது வானம்!
கவிழ்கிறது காரிருள் !
வியப்பினிலே விரிகின்றன விழிகள்...!
முள்ளில்லா செடியினிலே ரோஜாவொன்று
புதியதாய் பூக்கிறது!
காலையிலே பூக்கும் ரோஜா காரிருளில் பூத்திடுமோ ?
கண்ணைக் கட்டுகிறது எனக்கு!
திகைத்து நான் நிற்கையிலே திடீரென தூறல் மழை
அடடா என்ன இது!
புதியதாய் பூத்த பூவதனை
புன்னகையோடு வரவேற்க
பன்னீர் தெளிக்கிறதோ வானம் !
இரு கார் மேகக் கரம் குலுக்கி
மின்னல் வெட்டிச் சிரித்து
இடி இடி எனச் சிரித்துக் கொண்டாடுகிறது இயற்கை!
வீசும் காற்றிலே வேகமாகத் தலை விரித்தாடுகின்றன
குலை தாங்கிய தென்னை மரங்கள் !
அடித்திட்ட காற்றின் வேகத்தில்
அரை நிமிட நேரம் திசை மாறிய தூறலோ
தெளிக்கிறது சாரலாய் ...!
முகத்தில் அடித்திட்ட சாரலின் மிச்ச சொச்சங்கள்
ரோஜா மலரில் வீற்றிருக்கும் பனித்துளி போல்
அந்த ரோஜாவின் எழிலுருவை
வான்மன்னன் படம் எடுக்க விழைந்தானோ!
மீண்டும் ஒரு மின்னலொளி!
வீசி மறைந்திட்ட ஒளியினிலே நான் கண்டேன் ...!
நனைந்து சிரிக்கின்ற மலரவள் யாரென்று!
சிலிர்த்துச் சிரிக்கின்ற பெண்ணவள்...
என்னவள்தானென்று!
...............................................................................முத்துக் குமரன் சுரேஷ்
No comments:
Post a Comment